செய்திகள்
டேங்கர் லாரிக்குள் சொருகி நிற்கும் மோட்டார் சைக்கிளில் பிணமாக இருக்கும் நிர்மல்.

டேங்கர் லாரிக்குள் ‘பைக்’ புகுந்தது: கல்லூரி மாணவர் பலி

Published On 2019-08-23 10:51 GMT   |   Update On 2019-08-23 10:51 GMT
டேங்கர் லாரிக்குள் ‘பைக்’ புகுந்த விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

போரூர்:

முகப்பேர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் நிர்மல் (வயது 18). மறைமலை நகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் நண்பரான அதே கல்லூரியில் விசுவல் கம்யூனி கேசன் முதலாம் ஆண்டு படித்து வரும் அய்யப்பன் தாங்கலை சேர்ந்த கேலட் பென்னி (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை நிர்மல் ஓட்டினார். பின்னால் கேலட் பென்னி அமர்ந்து இருந்தார். இருவரும் ஹெல் மெட் அணியவில்லை.

அவர்கள் தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் ஏரி அருகே வந்தபோது முன்னால் கியாஸ் ஏற்றிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென அதிவேகமாக லாரியின் பின்புறத்தில் மோதி சொருகியது. மோதிய வேகத்தில் லாரிக்குள் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிர்மல் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் அமர்ந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயம்அடைந்த கேலட் பென்னி குரோம் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் குப்பையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் காசிமேடு இந்திரா நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பாரதி (39). தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்தார். நேற்று மாலை மாமியார் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வர புதுவண்ணாரப்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் வந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பாரதி பலியானார்.

காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News