செய்திகள்
கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ

முதல்வர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ அறிக்கை

Published On 2019-08-16 18:31 GMT   |   Update On 2019-08-16 18:31 GMT
முதல்-அமைச்சர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
காரைக்குடி:

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரும், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஆர்.ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பொதுவாழ்வில் இருப்பவர் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம். டெல்லியில் தவிர்க்க முடியாத நபர்களில் ஒருவராக திகழ்கிறார். ஆசியாவின் சிறந்த நிதி மந்திரி என்று பெயர் பெற்ற அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

அதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். முதல்-அமைச்சர் தனது பேட்டியில் ப.சிதம்பரம் இந்த நாட்டிற்கு என்ன நன்மை செய்துள்ளார் என்றும், தமிழ்நாட்டில் எத்தனை முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக பொருளாதாரமே முடங்கி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆடிப்போயிருந்த நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு வகைப்படுத்தி இந்தியா முழுமைக்கும் விவசாய கடன்களை ரத்து செய்து, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கி சாதனை படைத்தவர் ப.சிதம்பரம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அவர் பதவியில் இருந்தபோது தமிழகத்தில் அதிகமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்பதை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேலாவது அவர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்வார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News