செய்திகள்
தொல்லியல் கள பகுதியை கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டபோது எடுத்த படம்.

சிவகங்கை அருகே தொல்லியல் கள பகுதியை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்

Published On 2019-08-13 18:20 GMT   |   Update On 2019-08-13 18:20 GMT
சிவகங்கை அருகே தொல்லியல் கள பகுதியை கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
சிவகங்கை:

சிவகங்கை தொல்லியல் புலம் அமைப்பினர்கள் பழமையான சின்னங்களான கல்வட்டம், முதுமக்கள் தாழி, பழந்தமிழர் வாழ்விடங்கள், கல்வெட்டுகள், கோவில்கள் போன்றவற்றை பாதுகாக்க பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதையறிந்த காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவ-மாணவிகள் மற்றும் பேராசியர்கள் உள்பட 70 பேர்கள் இந்த பகுதிக்கு வந்து அவற்றை பார்வையிட்டனர். அவர்களை சிவகங்கை தொல்புலம் அமைப்பைச் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், புலவர் காளிராசா, பேராசிரியர் ராஜேந்திரன், அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சுரேஷ் மற்றும் முத்துக்குமார் ராஜசேகர், மூர்த்தி ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

கல்லூரி மாணவ-மாணவிகள் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லேந்தல் கிராமம், இலந்தக்கரை தொல்மேடு ஆகிய இடங்களில் உள்ள முதுமக்கள் தாழி மற்றும் கல்வட்டங்கள் ஆகியவைகளை பார்வையிட்டனர். மேலும் முடிக்கரை கிராமத்தில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானசம்மந்தநல்லூர் என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிற பழமையான பெருமாள் மற்றும் சிவன் கற்கோவில் களையும், அங்குள்ள கல்வெட்டுகளையும் பார்வையிட்டு அது குறித்த தகவல்களை கேட்டறிந்தனர்.

இதேபோல் சிவகங்கையை அடுத்த திருமலையில் உள்ள 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கை மற்றும் தமிழ் பிராமி எழுத்துகளை பார்வையிட்டனர். இந்த பகுதிகளை பார்வையிட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசியர்கள் சார்பில் இந்த தொன்மையான பகுதியாக உள்ள நல்லேந்தல், இலந்தக்கரை ஆகிய வாழ்விடங்களை பாதுகாத்து விரைவில் கள ஆய்வு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
Tags:    

Similar News