செய்திகள்
பெண்ணிடம் செயின் பறிப்பு

திண்டல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு

Published On 2019-08-08 10:15 GMT   |   Update On 2019-08-08 10:15 GMT
ஈரோடு அடுத்த திண்டல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 6½ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு அடுத்த திண்டல் ராம் நகரைச் சேர்ந்தவர் திலகம் (வயது 52). நேற்று மாலை திலகம் அருகில் உள்ள மாவு மில்லுக்கு சென்று மாவை அரைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது திலகம் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வர பின்னால் உட்கார்ந்து வந்த வாலிபர் திடீரென திலகம் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் செயினை பறித்தார்.

பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திலகம் திருடன்.. திருடன்.. என அலறினார். ஆனால் மழை பெய்து கொண்டிருந்ததால் அவருக்கு உதவ யாரும் வரவில்லை. நடந்த சம்பவத்தை வீட்டில் வந்து அவர் கூறினார்.

இதையடுத்து வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது கொள்ளை நடந்த இடத்தின் அருகில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த துணிகர நகை பறிப்பு கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News