செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு

Published On 2019-08-06 08:11 GMT   |   Update On 2019-08-06 08:11 GMT
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து நீர்மட்டம் 65 அடியை எட்டியது.
ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி அங்குள்ள பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8113 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று அணையில் நீர்மட்டம் 65 அடியை எட்டியது.

தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையிலிருந்து குடிநீருக்காக 205 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. எதிர்பாராத பருவமழை பெய்யாததால் ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. அந்த வாய்ப்பு மிக குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் பருவமழை பெய்து அணைக்கு தண்ணீர் வருவதால் ஆகஸ்ட்டு மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News