செய்திகள்
கொலை

சத்தியமங்கலத்தில் வாலிபர் படுகொலை- கொலையாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை

Published On 2019-08-01 21:31 IST   |   Update On 2019-08-01 21:31:00 IST
சத்தியமங்கலத்தில் வாலிபரை கல்லால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த மேட்டூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 30). இவர் சத்தியில் உள்ள ஒரு மெக்கானிக் பட்டறையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் வாலிபர் ஜெகதீசன் நேற்று அதிகாலை சத்தி-கோவை ரோட்டில் பழைய போக்குவரத்து கழகம் அருகே பிணமாக கிடந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

வாலிபர் ஜெகதீசனை கொலையாளிகள் அவரது இடுப்பு பகுதிக்கு கீழ் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை அளித்தது.

அவருடன் பழகிய நண்பர்களே இந்த கொடூர கொலையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

ஜெகதீசன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு பதறியடித்தப்படி ஒடி வந்தனர்.

கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க கூடாது என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்களிடம் போலீசார் இன்னும் ஓரிரு நாளில் கொலையாளியை பிடித்து விடுவோம் என்று கூறிய பிறகே கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் கொலை பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிருஷ்ணசாமி தலைமையில் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை நியமிக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்படையினர் அதிரடியாக விசாரித்து வருகிறார்கள். போலீசார் கூறும்போது கொலை பற்றி எங்களுக்கு துப்பு கிடைத்து உள்ளது. கொலையாளியை நெருங்கி விட்டோம் இன்று அல்லது நாளைக்குள் பிடித்து விடுவோம் என்று கூறினர்.

வாலிபர் ஜெகதீசன் படுகொலை செய்யப்பட்டதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

Similar News