வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - வேலூர் மக்கள் கோரிக்கை
வேலூர்:
ரத்துசெய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது. 100 சதவீத வாக்குப் பதிவு நடக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
வேலூர் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் ஆகஸ்டு 5-ந் தேதி வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வேலூர் தொகுதியில் வசித்து அதே தொகுதியில் பணிபுரிந்து வருபவர்களுக்கு பொருந்தும். ஆனால் பணி நிமித்தம் காரணமாக பெங்களூர், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தங்கிப் பணிபுரிந்து வருபவர்களுக்கு ஆகஸ்டு 5-ந் தேதி விடுமுறை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், சுமார் 10 சதவீதம் அளவுக்கு வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. பொதுத் தேர்தலாக இருக்கும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விடுமுறை கிடைத்துவிடும்.
ஆனால் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுவதால், இத்தொகுதிக்கு மட்டுமே பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் வெளியூரில் பணி நிமித்தமாக தனி நபர்களாகவும், குடும்பமாகவும் வசித்து வருபவர்களுக்கு விடுப்பு கிடைப்பது குறித்து வாக்காளர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
வெளியூரில் வசிக்கும் வேலூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கான விடுமுறை குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட வேண்டும். பணியில் இருப்பவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விடுப்பு கிடைத்தால் மட்டுமே அவர்களால் தங்களுடைய தொகுதிக்கு சென்று வாக்களிக்க முடியும். அதே நேரத்தில் வாக்குப் பதிவு சதவீதமும் கூடும்.
அதனால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என வேலூர் தொகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.