செய்திகள்
போராட்டம்

திண்டுக்கல் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல் போராட்டம்

Published On 2019-07-26 19:56 IST   |   Update On 2019-07-26 19:56:00 IST
திண்டுக்கல் அருகே சாலை வசதி கேட்டு மறியல் செய்த பொதுமக்களை கலெக்டர் விஜயலட்சுமி சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல்-நத்தம் சாலையில் எமக்கலாபுரம் பஞ்சாயத்து கருப்புடையான் பட்டியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை சேதம் அடைந்தது. எனவே இதனை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது. அதன்பேரில் எமக்கலாபுரம் முதல் கருப்புடையான்பட்டி, சிறுமலை பிரிவு வரை ரூ.18 கோடியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் இந்த சாலை அமைக்கும் பணியில் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணிகள் தொடங்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் பணிகளையும் தாமதப்படுத்தி வந்தனர்.

இதனால் இன்று கொசவப்பட்டி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சாணார்பட்டி போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த சமயம் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு பணிக்காக நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மறியல் போராட்டம் நடந்ததை பார்த்து காரை விட்டு இறங்கி பொதுமக்களிடம் விபரம் கேட்டறிந்தார். பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இது குறித்து கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையான அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார்.

அதன்படி அளவீடு பணிகளும் தொடங்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News