செய்திகள்
சேற்றில் சிக்கிய அரசு பஸ்சை மீட்கும் பணி நடந்தபோது எடுத்தபடம்

விருத்தாசலம் இளமங்கலம் சாலையில் சேற்றில் சிக்கிய அரசு பஸ்

Published On 2019-07-24 12:21 GMT   |   Update On 2019-07-24 12:21 GMT
விருத்தாசலம் இளமங்கலம் சாலையில் பலத்த மழையால் சேற்றில் அரசு பஸ் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் இரவு முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து தாழநல்லூர் கிராமத்துக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றி சென்றது.

அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் விருத்தாசலம் நோக்கி பஸ் புறப்பட்டது. அப்போது விருத்தாசலம் பகுதியில் கனமழை பெய்தது. ஆலிச்சிக்குடி, க.இளமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணி நடந்ததால் பல்வேறு பணிகளுக்காக டிராக்டரில் மண் ஏற்றி செல்லப்பட்டது. இந்த டிராக்டர்களில் இருந்து கிழே விழுந்த மண் சாலையில் நிரம்பி இருந்தது.

மழை பெய்தவுடன் சாலையில் படிந்திருந்த மண், சேறும் சகதியுமாக மாறியது. அந்தசாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் தாழநல்லூர் கிராமத்திலிருந்து புறப்பட்ட பஸ் இளம்மங்கலம் அருகே வந்த போது சாலையில் இருந்த சேற்றில் சிக்கியது சாலையில் பஸ்சை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை அங்கேயே நிறுத்தினர். மழை விட்டவுடன் செல்லலாம் என பஸ்சில் அமர்ந்திருந்தனர்.

சாலையில் பஸ்நின்றதால் அந்த பகுதி வழியாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.

சிறுது நேரத்தில் மழை விட்ட உடன் பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார். ரோடு சேறும் சகதியுமாக இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சென்றது. எனவே பஸ்சை டிரைவர் சாலையிலேயே நிறுத்தி விட்டார்.

இதனால் பஸ்சில் வந்த 4 பயணிகளும் பஸ்சைவிட்டு இறங்கி தங்களுடைய ஊர்களுக்கு நடந்தே சென்றனர்.

பஸ் செல்ல முடியாததால் டிரைவரும், கண்டக்டரும் இரவு முழுவதும் பஸ்சிலேயே இருந்தனர். இதனால் இரவு முழுவதும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இன்றுகாலை சாலையில் இருந்த மண்னை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


சேற்றில் சிக்கி இருந்த பஸ் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. மீண்டும் ஆலிச்சிக்குடியில் இருந்து பஸ் காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இன்று காலையிலும் இளமங்கலம் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் அந்த வழியாக பஸ் மற்றும் வாகனங்கள் ஏதும் செல்லவில்லை, இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

Tags:    

Similar News