செய்திகள்
மயக்கம் அடைந்த வாலிபருக்கு முதல் உதவி சிகிச்சை.

அத்திவரதர் விழா: கூட்ட நெரிசலில் பக்தர்கள் மயக்கம்

Published On 2019-07-15 10:20 GMT   |   Update On 2019-07-15 13:24 GMT
வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 15-ம் நாளான இன்று கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் மயக்கம் அடைந்தனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்றும், நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் காஞ்சீபுரம் நகரம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இரண்டு நாட்களிலும் இரவு 12 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.

விழாவின் 15-ம் நாளான இன்று அத்திவரதர் பச்சை வண்ண பட்டாடையில் அருள்பாலித்தார். இன்றும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. அதிகாலையில் இருந்து நீண்ட நேரம் வரிசையில் நின்றதாலும், வெயிலின் தாக்கத்தாலும் 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்தபடி உள்ளது.

இன்று காலை இசை அமைப்பாளர் இளையராஜா, அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே தினமும் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் சகஸ்ர நாமம் வழிபாடு திடீரென காலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டதாகவும், இதனால் பொது தரிசன பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல் பரவியது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கேட்டபோது, ‘சகஸ்ர நாம வழிபாடு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சாமி அலங்காரத்துக்காக காலையில் சிறிது நேரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன’ என்றார்.

Tags:    

Similar News