ஆலங்காயத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் 10-வது வார்டில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆலங்காயம் - ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது எங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்கபடுவதில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டு கின்றனர் இதனால் நாங்கள் தண்ணீர் இன்றி பெரிதும் பாதிக்கபட்டுள்ளோம் எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று ஆவேசமாக பொதுமக்கள் கூறினர்.
சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.