செய்திகள்
கைது

வாலாஜா அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 7 டன் ரேசன் அரிசி பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2019-07-09 16:43 IST   |   Update On 2019-07-09 16:43:00 IST
வாலாஜா அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 7 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் நுகர்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று இரவு வாலாஜா டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து வேலூர் மார்க்கமாக வந்த லாரியை மறித்தனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது. போலீசார் ஜீப்பில் லாரியை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். தனியார் கல்லூரி அருகே லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 50 கிலோ எடையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 7 டன் எடையுள்ள ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது.

போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாணியம்பாடியை சேர்ந்த குமார் (வயது 35) என்பதும் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குமாரை கைது செய்து 7 டன் ரேசன் அரிசியுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல், 7 டன் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்த முடியாது. ஆந்திராவுக்கு ரெயில்கள், பஸ்கள் மூலம் கடத்தி செல்வது அதிகரித்து வருகிறது. ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.

குறிப்பாக, ஆந்திராவுக்கு கடத்தப்படும் ரேசன் அரிசி, அங்கு பாலிஷ் போட்டு புதுரக அரிசியாக விற்கப்படுகிறது.

எனவே, ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News