கவர்னர் கிரண்பெடி கொடுக்கும் தொல்லையை எதிர்த்து போராடும் சக்தி எங்களிடம் உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பரிசுகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் நலனுக்காக அரசு செயல்படுகிறது. மக்கள் விரும்பாத திட்டத்தை எதிர்ப்போம். புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி எங்களுடைய அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். மக்கள் நலன் திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டையாக இருக்கிறார். அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். அதிகாரம் இல்லாமல் அரசு அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதை கண்டித்து அவருக்கு கடிதம் எழுதினேன்.
ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்தும் கவர்னர் கிரண்பெடி செவிசாய்ப்பதாக இல்லை. அவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி கிரண்பெடி செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம். எனவே புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளரான வைத்தியலிங்கம் எம்.பி. 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் அதற்கு உதாரணம். எங்களது ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து உள்ளனர். இதை புரிந்து கொள்ளாமல் கவர்னர் கிரண்பெடி தொல்லை கொடுக்கிறார். அவரை எதிர்த்து போராடும் சக்தி எங்களிடம் உள்ளது. கோர்ட்டு உத்தரவை மீறி செயல்படும் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கட்சி பதவியை ராஜினாமா செய்தார். அவரை சந்தித்து கட்சி பதவியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களை ஒருங்கிணைத்து செயல்படும் சக்தி ராகுல்காந்தியிடம் உள்ளது. எனவே மீண்டும் அவரை சந்தித்து பேச உள்ளேன்.
இவ்வாறு புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.