செய்திகள்
அத்திவரதரை தரிசிக்க திரண்ட பக்தர்கள் கூட்டம்.

விடுமுறை நாளான இன்று அத்திவரதரை தரிசிக்க 1 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2019-07-07 12:16 IST   |   Update On 2019-07-07 12:16:00 IST
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க விடுமுறை நாளான இன்று 1 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

கோவில் வசந்த மண்டபத்தில் சயன நிலையில் அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரள்கிறார்கள்.

மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருடன் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனும் உடன் சென்றார்.

அத்திவரதர் பற்றிய சிறப்புகளை ரவிசங்கர் பிரசாத்திடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். டி.கே. நம்பி தெரு, டோல்கேட், ஆனைக்கட்டி தெரு அமுதபடி தெரு, வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, உள்ளிட்ட தெருக்கள் பக்தர்கள் கூட்டத்தால்திக்கு முக்காடியது.

வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கார், வேன்களில் வந்து குவிந்தனர். 3 கிலோ மீட்டர் துரம் வரை வரிசை இருந்தது. பொது தரிசன வரிசையில் சென்றவர்கள் குறைந்தபட்சம் 4 மணி நேரம் காத்திருந்தே தரிசிக்க முடிந்தது.

இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் ஒவ்வொரு வண்ணபட்டு அலங்காரத்தில் அத்திவரதர் அருள் பாலித்து வருகிறார். இன்று மஞ்சள் பட்டு அலங்காரத்தில் காட்சி கொடுத்தார்.

Similar News