போரூர் வழிப்பறியில் ஈடுபட்ட மீன் வியாபாரி உள்பட 3 பேர் கைது
போரூர்:
போரூர் பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே பகல் மற்றும் இரவு நேரங்களில் தனியாக மோட்டார் சைக்கிளில் வருபவர்களை நோட்டமிட்டு கத்தியை காட்டி மிரட்டி ஒரு கும்பல் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக போரூர் உதவி கமிஷனர் செம்பேடு பாபுவுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று போரூர் ஏரிக்கரையில் சந்தேகத்திற்கு இடமாக கத்தியுடன் சுற்றி திரிந்த வாலிபரை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவன் குன்றத்தூர் அடுத்த மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த யாகோப் (22) என்பது தெரிந்தது. போரூர் ஏரியில் மீன்பிடித்து விற்பனை செய்து வரும் யாகோப் போரூர் ஏரிக்கரையில் வசித்து வரும் கூட்டாளிகளான மணிகண்டன், சுந்தர்ராஜ் ஆகியோர் உடன் சேர்ந்து தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
யாகோப் அளித்த தகவலின்படி கூட்டாளிகள் 2 பேர் உள்பட 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, ஐபோன் உள்ளிட்ட 4 செல்போன்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.