செய்திகள்
வேன் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது

திண்டிவனம் அருகே ரோட்டில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்

Published On 2019-07-02 18:48 IST   |   Update On 2019-07-02 18:48:00 IST
திண்டிவனம் அருகே துக்கநிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது சொரயப்பட்டு. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் சென்னையில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு வேனில் நேற்று மாலை புறப்பட்டனர்.

வேனை அதே ஊரை சேர்ந்த ராஜேஷ் (வயது 25) என்பவர் ஓட்டி சென்றார். பின்பு அவர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று இரவு 9 மணியளவில் சென்னையிலிருந்து வேனில் சொரயப்பட்டுக்கு திரும்பினர். இரவு 11 மணியளவில் அந்த வேன் திண்டிவனம் அருகே உள்ள சலவாதி என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடி ரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த ஞானம் (45) வைலட் (40)ரெஜினா (45)ஜெயமணி (48) மகேஸ்வரி (65) அமுதா (45)ரோனிகா(50) ராணி( 50) மரிய பிரகாசம்(50)மேரி (60)தோபியாஸ் (60)மணி(60)பிச்சமுத்து (64)ராமசாமி (70), மோட்சராக்சிணி (57)சின்னப்பன்(62 ) பால்ராஜ் (30) லிமா(60) உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரோ‌ஷணை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். விபத்தில் காயம் அடைந்த 21 பேரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் மோட்சராக்சிணி, சின்னப்பன், பால்ராஜ், லிமா ஆகியோரது உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Similar News