கேளம்பாக்கம் அருகே வேன் மீது லாரி மோதல்: 2 தொழிலாளர்கள் பலி
மாமல்லபுரம்:
கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இரவு நேர காவல் பணி, துப்புரவு வேலையில் கல்குளம், அணைக்கட்டு, பழைய நல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
அவர்கள் தினந்தோறும் வேனில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இன்று காலை பணி முடிந்த தொழிலாளர்கள் பெண்கள் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்டோர் வேனில் கல்குளம் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கடலூரில் இருந்து ‘ஸ்பிரிட்’ ஏற்றி வந்த டேங்கர் லாரி திடீரென வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேன் முழுவதும் நொறுங்கியது. அதில் இருந்து கல்குளம், புதுக்காலனியைச் சேர்ந்த பாலாஜி (28), அய்யனாரப்பன் (30) ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் வேனில் பயணம் செய்த முருகன், நந்தினி, சரத்குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.