செய்திகள்
இருசக்கர வாகனத்தை புலி விரட்டி சென்ற காட்சி.

ஊட்டி அருகே இருசக்கர வாகனத்தை விரட்டிய புலி

Published On 2019-07-01 17:07 IST   |   Update On 2019-07-01 17:07:00 IST
ஊட்டி அருகே இருசக்கர வாகனத்தை புலி விரட்டியதால் வாகனத்தை வேகமாக ஓட்டி இளைஞர்கள் தப்பி சென்றனர்.

ஊட்டி:

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் காப்பகமும், கேரளாவில் வனவிலங்கு சரணாலயமும் ஒன்றிணைந்த வனப்பகுதியாக உள்ளது. இந்திய அளவில் யானைகள் மற்றும் புலிகள் வாழக்கூடிய இதமான காலநிலை மற்றும் நிலப்பரப்பு சாதகமாக இருப்பதால், இந்தியாவிலேயே அதிகமான புலிகள் வாழக்கூடிய பகுதியாக இந்த மூன்று சரணாலயங்கள் உள்ளன.

நேற்று மாலை வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள், தாங்கள் அணிந்து இருந்த தலைக்கவசத்தில் அதிநவீன கேமரா பொருத்தி இருந்தனர்.

இந்த கேமரா மூலம் இயற்கை காட்சிகளை படம் பிடித்தவாறு சென்றனர். அவர்கள் புல் பள்ளி என்ற பகுதியை கடந்தபோது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வயது முதிர்ந்த புலி ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை தாக்க முயற்சி மேற்கொண்டது. இதை பார்த்து சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி தப்பினர். இதுகுறித்து மூத்த வனத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில் புலி நேரடியாக மனிதர்களை தாக்க முயற்சி செய்தது இதுவே முதல் முறை. புலியின் வேட்டையாடும் திறன் குறைந்து பசியால் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்றனர்.

இந்தப் புலி ஆட்கொல்லி புலியாக இருக்கலாம் என்பதால் புலியை தேடும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News