செய்திகள்

திருச்சி-புதுக்கோட்டையில் பலத்த மழை: மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி

Published On 2019-06-08 05:15 GMT   |   Update On 2019-06-08 05:15 GMT
திருச்சி-புதுக்கோட்டையில் பலத்த மழை பெய்தது. இடி தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன.

கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தன. கீரனூரை அடுத்த உறவிக்காடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டு இருந்தபோது, மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.

மேலப்புது வயலை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சங்கரன் (வயது 45) பலத்த இடி சத்தம் கேட்ட அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார். கண்ணங்குடியை சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியதாஸ் (49) மற்றும் மலர் (47), வசந்தா (45) ஆகிய 3 பேரும் காயம்பட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தனர். பலத்த மழை பெய்ததால், ஆரோக்கியதாஸ் உள்பட 3 பேரும் கட்டிடத்தின் அருகே ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் ஆரோக்கியதாஸ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மலர், வசந்தா இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதே போல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 30 நிமிடம் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News