செய்திகள்

மாணவிகள் உயிரிழப்புக்கு மத்திய அரசுதான் பொறுப்பு- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2019-06-08 05:00 GMT   |   Update On 2019-06-08 05:00 GMT
தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுக்கோட்டை வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் தளராது இருக்க வேண்டும்.

இந்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி தலைமை மற்றும் மற்ற மாநில முதல்-மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். இந்த அமைப்பு அதிகாரமில்லாத அமைப்பு. இதனை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே பிரதமருக்கு எழுதிய கடிதத்தை எனக்கும் அனுப்பி உள்ளார். அதுகுறித்து பரிசீலனை செய்வேன்.


தற்போதைய புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தினம் தினம் எங்கள் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் போராடி போராடியே மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறோம். அவரது போக்கு மாறவில்லை. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கவர்னர் கிரண்பேடி அமைதியாக உள்ளார் என்றார்.

பின்னர் அவரிடம் புதுச்சேரி கவர்னராக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சாமி நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், புதுச்சேரி கவர்னராக சுப்ரமணிய சாமியை முதலில் மத்திய அரசு நியமிக்கட்டும். அதன் பிறகு நான் பதில் கூறுகிறேன். இந்தி திணிப்பை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இருமொழிக் கொள்கை தான் எங்களுடைய நிலைப்பாடு என்றார்.
Tags:    

Similar News