செய்திகள்

விளாங்குடியில் ரூ.6 லட்சத்தில் 3 ஏரிகளை தூர்வாரும் பணி தொடக்கம்

Published On 2019-06-03 17:53 IST   |   Update On 2019-06-03 17:53:00 IST
ரூ.6 லட்சம் செலவில் விளாங்குடியில் உள்ள வடுகனேரி, புது ஏரி, செட்டிக்குட்டை ஏரி ஆகிய 3 ஏரிகளை தூர்வாரி புனரமைக்கும் பணியை நேற்று தொடங்கினர்.
வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன், நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.11 லட்சம் செலவில் சுமார் 7 ஏரிகளில் கருவேல மரங்கள், காட்டாமணக்கு போன்றவற்றை அகற்றி ஏரிகளை ஆழப்படுத்தி உள்ளார். ஏரிகளை சுற்றி பல வகையான மரக்கன்றுகள் நட்டு, பாதுகாப்பு வேலிகளை அமைத்துள்ளார். அவருடைய செயலை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர் மூலமாக கோவையை சேர்ந்த சண்முகம், செந்தில்குமார், சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஒரு அறக்கட்டளையுடன் இணைந்து சுமார் ரூ.6 லட்சம் செலவில் விளாங்குடியில் உள்ள வடுகனேரி, புது ஏரி, செட்டிக்குட்டை ஏரி ஆகிய 3 ஏரிகளை தூர்வாரி புனரமைக்கும் பணியை நேற்று தொடங்கினர்.

முன்னதாக அந்த பணிக்கான பூமி பூஜை, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, வக்கீல் முத்தமிழ்ச்செல்வன், இளவரசன் மற்றும் விளாங்குடி கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏரிகள் தூர்வாரப்படுவதால், அவற்றில் நீரை சேமிக்கும் பட்சத்தில், விளாங்குடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Similar News