செய்திகள்

சென்னையில் பல இடங்களில் மின்சார தடையால் பொதுமக்கள் அவதி

Published On 2019-05-08 08:37 GMT   |   Update On 2019-05-08 08:52 GMT
சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் பராமரிப்பு பணி என்ற பெயரில் மின் வாரியம் பகலில் மின்தடை ஏற்படுத்துவதால் கோடை வெயிலில் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

சென்னை:

சென்னையில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பானி புயல் சென்னைக்கு மிக அருகில் வந்து திசை மாறி சென்றதால் ஈரப்பதம் முழுவதையும் புயல் இழுத்துச் சென்று விட்டது.

இதன் காரணமாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. காலை 10 மணிக்கே அனல் காற்று வீசுகிறது. இரவு வரை வெப்பம் நீடிக்கிறது.

இந்த சூழலில் பராமரிப்பு பணி என்ற பெயரில் சென்னையில் பல பகுதிகளில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

பெரும்பாலான வீடுகளில் பகலில் ஆண்கள் வீட்டில் இருப்பதில்லை. பெண்கள்தான் வீட்டில் சமையல், துணி துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். மின் நிறுத்தம் காரணமாக பெண்கள் படும் வேதனை சொல்லி மாளாது.

முகப்பேர், திருவொற்றியூர், வடபழனி உள்பட சில பகுதிகளில் இரவு நேரங்களிலும் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் வீடுகளில் ஏ.சி. சரிவர இயங்காமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இரவில் அதிகளவில் மின் தடங்கல் ஏற்படக் கூடாது என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மின் பராமரிப்பு பணி பகலில்தான் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வந்து விடுகிறது. மின் தடங்கல் குறித்து முன் கூட்டியே அறிவிப்பு வெளியிட்டு வருகிறோம்” என்றார்.

Tags:    

Similar News