வேலூர் கொசப்பேட்டை பெயிண்டர் கொலையில் நண்பர்கள் 2 பேரிடம் விசாரணை
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் கோவில் தெருவை சேர்ந்தவர் ரசூல் (வயது 25), பெயிண்டர். இவர் கடந்த 3-ந் தேதி இரவு 10 மணியளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் ரசூலை சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த ரசூலை, அப்பகுதி மக்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரசூல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சித்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வேலூரை சேர்ந்த ரசூலின் நண்பர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.