செய்திகள்

234 தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி தனித்தே போட்டியிடும்- சத்ய நாராயணா

Published On 2019-04-30 08:18 GMT   |   Update On 2019-04-30 08:18 GMT
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சகோதரர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார். #Rajinikanth #SathyaNarayanaRao
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தமிழக சட்டசபை தேர்தலில் தான் தீவிர கவனம் செலுத்தப் போவதாக ஏற்கனவே பல தடவை கூறி விட்டார்.

தமிழக சட்டசபையின் பதவிக் காலம் 2021-ம் ஆண்டு வரை உள்ளது. எனவே இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் அரசியலில் நிதானமாக காலடி எடுத்து வைக்க முடிவு செய்துள்ள ரஜினி, திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தியபடி உள்ளார்.

தற்போது ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த ரஜினி உத்தரவிட்டுள்ளார். அதை ஏற்று அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியதும் அரசியல் கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு இறுதியில் சுமார் 5 லட்சம் பேரை திரட்டி பிரமாண்ட அரசியல் மாநாட்டை நடத்தவும் ரஜினி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



புதிய அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி பெரிய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்வார் என்று முன்பு கூறப்பட்டது. குறிப்பாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவார் என்ற மாயை உள்ளது. ஆனால் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணா இன்று அதற்கு விடை அளித்துள்ளார்.

பிள்ளையார்பட்டி ஆலயத்துக்கு சாமி கும்பிட வந்த அவர் வழிபாடுகள் முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

ரஜினியின் புதிய கட்சிக்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு முக்கிய கடமைகள் காத்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி தனித்துப் போட்டியிடும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டது.

இவ்வாறு ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா கூறினார். #Rajinikanth #SathyaNarayana
Tags:    

Similar News