செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே விவசாயி வெட்டிக்கொலை- 2 பேர் கோர்ட்டில் சரண்

Published On 2019-04-29 16:33 IST   |   Update On 2019-04-29 16:33:00 IST
முன் விரோதத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கே.செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வீரப்பதேவர் (வயது 56). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களுக்கும் தோட்ட பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் இருந்து வந்தது.

சம்பவத்தன்று வீரப்ப தேவர் தனது தோட்டத்தில் இருந்தபோது அங்கு வந்த உறவினர்கள் முத்துக்குமார் (35), வெள்ளைச்சாமி (37), பாலு (30), சின்னராஜ் (33), முத்து கனகம்மாள் (50) ஆகியோர் பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த 5 பேரும் வீரப்பதேவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீரப்பதேவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பரளச்சி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான 5 பேரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக முத்துக்குமார், வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரும் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Tags:    

Similar News