செய்திகள்
10ம் வகுப்பு தேர்வு முடிவை செல்போனில் பார்க்கும் மாணவிகள் (சீமாட்டி வெலிங்டன் பள்ளி)

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு - மாணவிகள் 3.7 சதவீதம் அதிக தேர்வு

Published On 2019-04-29 15:47 IST   |   Update On 2019-04-29 15:47:00 IST
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
சென்னை:

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெற்றது.

இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வுகள் மூலமாகவும் 9 லட்சத்து 76 ஆயிரத்து 19 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் மாணவிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 570. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 289.

விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

10-ம் வகுப்பில் மொத்தம் 95.2 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 94.5 சதவீதம் மாணவ-மாணவிகள்தான் தேர்ச்சி அடைந்து இருந்தனர்.

இந்த ஆண்டு மாணவிகள் 97 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 12,548 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வை எழுதி இருந்தனர். இந்த பள்ளிகளில் 6,100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

அரசு பள்ளிகளில் 92.48 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.53, மெட்ரிக் பள்ளிகள் 99.05, இருபாலர் பள்ளிகளில் 95.42 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.

பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 88.94 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது.

பாட வாரியாக தேர்ச்சியை கணக்கிட்டால் மொழி பாடத்தில் 96.12 சதவீத பேரும், ஆங்கிலத்தில் 93.35 சதவீத பேரும், கணிதம் பாடத்தில் 96.46 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 98.56 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 97.07 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய 4,816 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 4,395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைக் கைதிகளில் 152 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இன்று காலை 9.30 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் அவற்றை 3 இணைய தளங்கள் மூலம் மாணவ-மாணவிகள் பார்த்தனர். இதன் மூலம் மாணவ-மாணவிகள் உடனுக்குடன் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

மேலும் பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

இவை தவிர கலெக்டர் அலுவலகங்களிலும், நூலங்களிலும் இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் மாணவ-மாணவிகள் மிக எளிதாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு எழுதிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். வருகிற 2-ந்தேதி முதல் மதிப்பெண் பட்டியல்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 6-ந்தேதி முதல் மாணவர்கள் www.dge.tn.nic என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் மூன்றாவது வெளியிட முடிவு செய்துள்ளனர்.

சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் நான்காவது வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு சான்றிதழுடன் மதிப்பெண் பட்டியலும் சேர்த்து வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். #SSLC #SSLCResult

Tags:    

Similar News