செய்திகள்

சங்கரன்கோவிலில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2019-04-18 15:50 GMT   |   Update On 2019-04-18 15:50 GMT
சங்கரன்கோவிலில் 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காததால் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7-ம் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 18 நாட்களுக்கு முன்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காததால் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் உள்ள வாட்டர் டேங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இது குறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, சங்கரன்கோவிலில் சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் ஒழுங்காக செய்யப்படுகிறது. மற்ற பகுதி மக்களை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மேலும் மக்களுக்கு தண்ணீர் இல்லாத சமயத்தில் வாட்டர் டேங்கில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அடிக்கடி டேங்கர் வாகனம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து அவர்களுடன் பேசிய இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் முற்றுகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News