செய்திகள்

கம்பம் அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை

Published On 2019-04-02 15:50 IST   |   Update On 2019-04-02 15:50:00 IST
கம்பம் அருகே தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் சுருளி பட்டி, நாராயணதேவன்பட்டி சந்திப்பு பகுதியான விவசாய நிலங்கள் உள்ள மணர்படுகை ஆலமரம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உத்தமபாளையம் டி.எஸ்.பி. வீரபாண்டி ராயப்பன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னி வளவன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அந்த வாலிபரின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டு அடையாளம் தெரியாத நிலையில் இருந்தது. அவர் அருகில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரத்த கறையுடன் கூடிய கல்லும் கிடந்தது. மேலும் ஏராளமான மது பாட்டில்களும் கிடந்தன.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தை சுற்றிவிட்டு சிறிது தூரம் ஓடி பின்னர் நின்றது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக யாரேனும் இங்கு அழைத்து வந்து மது குடித்து பின்னர் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை ஆராய்ந்து அவர்களில் யாரேனும் கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News