செய்திகள்

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1¾ லட்சம் பறிமுதல்

Published On 2019-03-31 18:01 GMT   |   Update On 2019-03-31 18:01 GMT
கரூர் மற்றும் குளித்தலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
குளித்தலை:

கரூர் மாவட்டம் லாலாபேட்டை பஸ்நிறுத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் வந்த திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த சாதிக்கிடம் (வயது 34) ரூ. 93 ஆயிரம் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது உறையூரில் இருந்து கொடுமுடிக்கு ஆடு வாங்கச் செல்வதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் அவர் வைத்திருந்த பணத்திற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. இதையடுத்து சாதிக்கிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குளித்தலை கோட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர்.

இதே போல், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொளந்தக்கவுண்டனுார் அம்பேத்கர் நகரில் நிலமெடுப்பு சிறப்பு தனிவட்டாட்சியர் அமுதா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கருர் அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கியாஸ் ஏஜென்சி நடத்தி வரும் ராஜா (வயது 32) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை தடுத்து நிறத்தி விசாரித்த போது, அவர் உரிய ஆவணம் இன்றி ரூ.92 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், கரூர் வட்டாட்சியர் பிரபுவிடம் ஒப்படைத்தனர்.

பறக்கும்படை மற்றும் நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரால், இதுவரை ரூ.35 லட்சத்து 70 ஆயிரத்து 338 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.30 லட்சத்து 31 ஆயிரத்து 488 ரொக்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. 
Tags:    

Similar News