செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 4 பேரின் காவல் ஏப்ரல் 2 வரை நீட்டிப்பு

Published On 2019-03-19 11:30 GMT   |   Update On 2019-03-19 11:41 GMT
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரின் காவலை ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டித்து பொள்ளாச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது. #PollachiAbuseCase
கோவை:

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசிடம் 4 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் விசாரிக்க கடந்த 15-ம் தேதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் வேறு யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அவனது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர்.

இந்த விசாரணை காலம் முடிவடைந்த நிலையில் கோவை மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவனை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து, ஏற்கனவே இவ்வழக்கில் தொடர்புடைய சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறையில் திருநாவுக்கரசும் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரின் காவலை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் காணொலி காட்சி மூலம் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, நீதிபதி நாகராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். #PollachiAbuseCase
Tags:    

Similar News