செய்திகள்

சமூக ஆர்வலர் முகிலன் மாயம்-சென்னிமலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை

Published On 2019-03-08 10:40 GMT   |   Update On 2019-03-08 10:40 GMT
சமூக ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக சென்னிமலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்து வளர்ந்த சண்முகம் என்கிற முகிலன் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பில் தீவிரமாக பணியாற்றி வந்தவர். தற்போது தமிழகம் அளவில் இயற்கை வளங்களை பாதுகாக்க போராடி வரும் சமூக போராளியாக முகிலன் தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.

பல வருடங்களாக சென்னிமலை அதிகம் வராமல் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்தார். இவரை கடந்த 2 மாதங்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் முகிலன் கிடைக்கவில்லை.

இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி., போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு தற்போது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதில் அவரது சொந்த ஊரான சென்னிமலையில் திருப்பூர் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இன்ஸ்பெக்டர் சங்கீதா, மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் 3 நாட்களாக முகாமிட்டு அவரது நண்பர்கள், தொழில் ரீதியான தொடர்பில் உள்ளவர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகிலனை புரட்சிகர அமைப்பில் இணைத்தவர் மிக நீண்ட கால நண்பர் என்ற முறையில் தற் சார்ப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பொன்னையனிடம் 2 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.

இது குறித்து பொன்னையன் கூறியதாவது:-

சி பி சி ஐ டி., ஆய்வாளர் ஒருவரும் உதவி ஆய்வாளர் ஒருவரும் வீட்டிற்கு வந்தனர். முகிலன் புரட்சிகர இளைஞர் அமைப்போடு இணைந்தது, அவரது செயல்பாடு, வழக்குகள் பற்றி கேட்டறிந்தனர்.

முகிலன் குடும்பத்தில் கடன் பிரச்சனை உண்டா? தற்சார்பு விவசாயிகள் சங்க அலுவலகம் முகிலன் வீடு ஒரே வளாகத்தில் உள்ளதால் அங்கு ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா? என விசாரணை நடத்தி சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News