செய்திகள்

திருமருகல் அருகே அரசு பள்ளியில் ஆபத்தான குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது

Published On 2019-03-03 18:14 GMT   |   Update On 2019-03-03 18:14 GMT
திருமருகல் அருகே அரசு பள்ளியில் ஆபத்தான நிலையில் இருந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது.
திருமருகல்:

திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி கோட்டப்பாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி பழுதாகி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தது. மேலும் தொட்டியின் தூண்கள் உடைந்து காணப்பட்டது. இந்த தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து ஆபத்து ஏற்படும் நிலையில் இருந்தது.

இதனை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தம், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளி முன்பு மறியலில் ஈடுபட ஒன்று திரண்டனர். தொட்டியை இடித்து அப்புறப்படுத்தும் வரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமருகல் ஒன்றிய கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து கடந்த 26-ந்தேதி “தினத்தந்தி” நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தினர். உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட “தினத்தந்தி” நாளிதழுக்கும் அப்பகுதி பெற்றோர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News