செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 78 வாக்குச்சாவடிகள் பதற்றம் மிகுந்தவை - கலெக்டர் சாந்தா தகவல்

Published On 2019-02-27 23:24 IST   |   Update On 2019-02-27 23:24:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் 78 வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் நெருக்கடி மிகுந்தவை என மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பாராளுமன்ற பொதுத்தேர்தலை (2019) முன்னிட்டு பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் பதற்றமானவை, 90 சதவீதத்திற்கு மேல் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் நெருக்கடியானவை என பிரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களில் 36 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 4 வாக்குச்சாவடி மையங்கள் நெருக்கடியானவை எனவும் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் 37 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 1 வாக்குச்சாவடி மையம் நெருக்கடியானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த போலீஸ் துறையினர் மூலமாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) பாலசுப்ரமணியன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் போலீஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News