செய்திகள்

தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி

Published On 2019-02-24 18:17 GMT   |   Update On 2019-02-24 18:17 GMT
தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.
ஊட்டி:

தேசிய பசுமைப்படை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நீலகிரி மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், வினாடி-வினா போட்டிகள் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. போட்டியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேச்சுப்போட்டி நீலகிரி பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க இயற்கை விவசாயம் அல்லது இனி எப்பொழுதும் வேண்டாம் நெகிழி என்ற தலைப்பில் நடந்தது.

ஓவிய போட்டி இயற்கை விவசாயமும், நீலகிரியின் எதிர்காலமும் அல்லது நீலகிரியின் பல்லுயிர் பாதுகாப்பு என்ற தலைப்பிலும், வினாடி-வினா போட்டி நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகம் என்ற தலைப்பிலும் நடத்தப்பட்டது. போட்டி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதனை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் மேற்பார்வையிட்டார். போட்டிகள் முடிவு விவரம் வருமாறு:-

பேச்சுப்போட்டியில் கேர்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மோனிஷ்குமார் முதல் இடம், மிலித்தேன் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கவுசிகா 2-வது இடம், பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி 3-வது இடம், ஓவிய போட்டியில் குஞ்சப்பணை அரசு உண்டு உறைவிடப்பள்ளி மாணவர் அசோக்குமார் முதலிடம், கூடலூர் அரசு பள்ளி மாணவர் ரினுஷீத் 2-ம் இடம், ஊட்டி சி.எஸ்.ஐ. ஜெல் மெமோரியல் பள்ளி மாணவி மாளவிகா 3-ம் இடம் பிடித்தனர்.

வினாடி-வினா போட்டியில் பிக்கட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் அஜய்ராஜ் முதல் இடம், வாழைத்தோட்டம் ஜி.ஆர்.ஜி. பள்ளி மாணவர் அருண்குமார் 2-வது இடம், கேர்கெம்பை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மனோன்மணி 3-வது இடத்தை பிடித்தனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் இயற்கை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டு, நீலகிரி மாவட்டத்தின் உயிர்ச்சூழல் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News