செய்திகள்

உலக தாய்மொழி நாள்: தமிழை பாதுகாத்து வளர்ப்போம் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2019-02-20 10:15 GMT   |   Update On 2019-02-20 10:15 GMT
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி பாதுகாத்து, வளர்த்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகத் தாய்மொழி தினத்தை யொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். #InternationalMotherLanguageDay
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகத் தாய்மொழி தினத்தை யொட்டி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மக்கள் தங்கள் தாய்மொழிகளைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டு தோறும் பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது.

திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும், மொழிக்கு மட்டுமல்லாமல் வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க மொழியாகவும் விளங்குகின்ற நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வளம் சேர்க்கும் வகையில் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை போற்றிச் சிறப்பிக்கும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழறிஞர்கள், புலவர்களின் பெயர்களில் பல்வேறு விருதுகளைத் தோற்றுவித்து ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

இந்த ஆண்டு முதல், அயோத்திதாசப் பண்டிதர், மறைமலையடிகள் ஆகியோரின் பெயர்களில் புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சங்ககாலப் புலவர்களை நினைவு கூரும்விதமாக, தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடப்படும் ஏப்ரல் 29-ம் தேதி அப்புலவர்களின் நினைவுத் தூண்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவிச் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

பல்வேறு வகையில் தமிழ் மொழிக்காக பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுபவர்களுக்கும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

உலகத் தாய்மொழி நாளான இந்த இனிய நாளில், நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி பாதுகாத்து, வளர்த்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். #InternationalMotherLanguageDay

Tags:    

Similar News