செய்திகள்

கலசபாக்கம் அருகே போலி டாக்டர் கைது

Published On 2019-02-13 10:06 GMT   |   Update On 2019-02-13 10:06 GMT
கலசபாக்கம் அருகே போலி டாக்டரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

கலசபாக்கம் தாலுகா கோவூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்து கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருவண்ணாமலை சுகாதாரப்பணிகள் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

திருவண்ணாமலை சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பாண்டியன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கோவூர் கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு தனியார் கட்டிடத்தில் ஒருவருக்கு ஊசி போடும்போது அவரை கையும், களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் கலசபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஷாஜகான் (வயது 41) என்பதும், இவர் 10 ஆண்டுகளாக மருந்து கடையில் பணி செய்துவிட்டு கோவூர் கிராமத்தில் ஒரு மாதமாக தங்கி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், பிளஸ்-2 படித்துவிட்டு சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்ததும் தெரிந்தது.

இதுகுறித்து சுகாதார பணிகள் இணை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டர் ஷாஜகானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News