செய்திகள்

பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவது கீழ்த்தரமான அரசியல்- நிர்மலா சீதாராமன் பேச்சு

Published On 2019-02-03 10:21 GMT   |   Update On 2019-02-03 10:44 GMT
தமிழகத்துக்கு வரும் போது பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவது கீழ்த்தரமான அரசியல் என்று நிர்மலா சீதாராமன் பேசினார். #pmmodi #nirmalasitharaman #dmk

கோவை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை பாரதீய ஜனதா கட்சி நடத்தி வருகிறது.

இதில் மத்திய மந்திரிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.அதன்ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கோவை ஈச்சனாரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாரதீய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என நினைப்பவர் பிரதமர் மோடி ஆவார். அனைத்து மாவட்டங்களும் முன்னேற வேண்டும் என அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசில் பங்குதாரர்களாக இருந்த திராவிடக் கட்சிகள் தமிழகத்துக்கு செய்தது என்ன? அப்போது எதையும் செய்யாமல் இப்போது வேண்டுமென்றே கேள்வி எழுப்புகிறார்கள்.

பிரதமர் தமிழகத்துக்கு வரும் போது கருப்புக்கொடி காட்டுவது கீழ்த்தரமான அரசியல். தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு எல்லா வகையிலும் தி.மு.க. இடையூறாக இருக்கிறது.


மோடி சுயநலம் இல்லாத பிரதமர். அதனால் தான் அவர் தைரியமாக செயல்படுகிறார். ஒரே ஒரு எம்.பி.யை தான் தமிழக மக்கள் கொடுத்தார்கள் என்று பிரதமர் மோடி தமிழகத்தை ஒதுக்கி விடவில்லை. ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். மோடிக்கு கருப்புக்கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.

தானும் நல்லது செய்யாமல் மற்றவர்களையும் செய்ய விடாமல் தடுக்கும் தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். கூட்டணி குறித்து யோசிக்காமல் பாரதீய ஜனதாவினர் தேர்தல் பணிகளை தொடங்குங்கள். இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநகர் மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் மற்றும் பொள்ளாச்சி, கோவை தொகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மதியம் மத்திய மந்திரி நிர்மலா சீதாரமன் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். #pmmodi #nirmalasitharaman #dmk

Tags:    

Similar News