செய்திகள்

திமுக கூட்டணியில் பாமக இடம் பெறாது - திருமாவளவன்

Published On 2019-02-03 10:15 IST   |   Update On 2019-02-03 11:51:00 IST
திமுக கூட்டணியில் பாமக இடம் பெறாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #DMK #PMK

சென்னை:

தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலினை விடுதலை சிறத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் நேற்றிரவு சந்தித்து பேசினார். 30 நிமிடத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது.

அதன் பிறகு திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற தேசம் காப்போம் மாநாட்டில் பங்கேற்றதற்காக மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறும் என்பது வெறும் யூகம் தான்.

பா.ஜனதா-அதிமுக கூட்டணி அமையுமா? அமையாதா? என்பது அவர்களுக்குள் நடைபெறும் மவுனயுத்தமாகும். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் பா.ஜனதா மீது உள்ள அத்தனை வெறுப்பும் அ.தி.மு.க. மீது திரும்பும் என்ற அச்சம் அ.தி.மு.க. முன்னணி தலைவர்களிடம் உள்ளது.

பா.ஜனதாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மீது அக்கறை இல்லை. இப்போது திடீரென மீனவ மக்களை திருப்திபடுத்தும் வகையில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

2 ஹெக்டேர் நிலம் உள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தருவோம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் ஏறத்தாழ 25 கோடிக்கும் அதிகமாக நிலமற்ற ஏழை கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இந்த மக்களுக்கு எந்த பயனும் கிடைக்க கூடிய வகையில் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.100 பிடித்தம் செய்து அவர்களுக்கு 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் தருவதாக அறிவித்துள்ளனர்.

இவை அனைத்தும் கவர்ச்சிகரமான திட்டங்களாக உள்ளதே தவிர மக்களுக்கு பயன் அளிக்க கூடியதாக இல்லை.

பாராளுமன்ற தேர்தலுக்கான போலியான வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையாகவே நிதி நிலை அறிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #DMK #PMK

Similar News