செய்திகள்

மயிலாடுதுறை அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

Published On 2019-02-02 10:35 GMT   |   Update On 2019-02-02 10:35 GMT
மயிலாடுதுறை அருகே இன்று காலை பரிதாபம் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகம் இளந்தோப்பு பகுதி நடராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மனைவி வனிதா. இவர்களது ஒரே மகன் விஷ்ணு(வயது5).

சிறுவன் விஷ்ணு அப்பகுதியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். இன்று பள்ளியின் ஆண்டு விழாவையொட்டி காலை 8.30 மணியளவில் பள்ளி வேனில் தங்கள் மகன் விஷ்ணுவை பெற்றோர் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.இதையடுத்து மற்ற மாணவர்களையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வேன் வந்தது. டிரைவர் வேனை பள்ளியின் வாயிலில் நிறுத்தியதும் அதிலிருந்து மாணவ-மாணவிகள் இறங்கியுள்ளனர். அப்போது டிரைவர் வேனை நகர்த்தியபோது சிறுவன் விஷ்ணு வேனின் முன்பக்க டயரில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். இதைக்கண்ட மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பதறி துடித்தனர்.

இதையடுத்து வேன் டிரைவரான கடுவங்குடியை சேர்ந்த உதயசங்கர்(35) அங்கிருந்து தப்பியோடி விட்டார். பள்ளிக்கு மகனை அனுப்பிய சிறிது நேரத்திலேயே மகன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்ட கோவிந்தராஜிம், வனிதாவும் கதறி அழுதபடி பள்ளிக்கு ஓடிவந்தனர். அங்கு மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு தரையில் புரண்டு துடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மணல்மேடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து டிரைவர் உதயசங்கரை தேடிப்பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே இன்று காலை பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News