செய்திகள்

வீட்டை அபகரித்ததால் 3 மகள்களுடன் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்ற பெண்

Published On 2019-01-28 11:04 GMT   |   Update On 2019-01-28 11:04 GMT
திண்டுக்கல் அருகே வீட்டை அபகரித்து கொண்டதால் 3 மகள்களுடன் பெண் கலெக்டர் ஆபீசில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் நல்லம்மாள். (வயது 50). இவர் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அதிர்ச்சி அடைந்த டி.எஸ்.பி. பிரபாகரன் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது நல்லம்மாள் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியில் வசித்து வருகிறேன். எனது கணவர் வேல்முருகன் 4 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். சிறுகுழந்தைகளான அவர்களை நான் கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் வசித்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் அபகரித்து கொண்டு வீட்டை விட்டு துரத்தினார். இதனால் நான் எனது குழந்தைகளுடன் நாடக மேடையில் தங்கி பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன்.

இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் கலெக்டர் ஆபீசில் மனு அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நான் எனது குழந்தைகளுடன் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க வந்தேன்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

இதனையடுத்து போலீசார் அவரை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News