செய்திகள்

பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஆசிரியர் கடலில் குதித்து தற்கொலை

Published On 2019-01-25 10:41 GMT   |   Update On 2019-01-25 10:41 GMT
மனைவி பிரிந்து சென்றதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஆசிரியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை வம்பா கீரப்பாளையம் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் பிணம் கரை ஒதுங்கி கிடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் உப்பளம் தமிழ்த்தாய் நகரை சேர்ந்த ஜாய் ஜூலியா (வயது 33) என்பதும், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரான்சு நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்சில் இருந்து புதுவை திரும்பிய ஜாய் ஜூலியாவுக்கும், நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், சில நாட்களில் அந்த பெண் ஜாய் ஜூலியாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் ஜாய் ஜூலியா விரக்தியுடன் இருந்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜாய் ஜூலியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News