செய்திகள்

துபாயை தொடர்ந்து மற்றொரு சர்வதேச பதிப்பு - தினத்தந்தி இலங்கை பதிப்பு இன்று தொடக்கம்

Published On 2019-01-24 01:28 GMT   |   Update On 2019-01-24 01:28 GMT
இலங்கையில் தமிழ் வாசகர்களை சென்றடையும் வகையில் கொழும்பு நகரில் ‘தினத்தந்தி’ இன்று (வியாழக் கிழமை) முதல் வெளியாகிறது. இது ‘தினத்தந்தி’யின் 18-வது பதிப்பு ஆகும். #DailyThanthi #NewsPaper #SriLanka
கொழும்பு:

தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்து இருக்கிறது.

‘தினத்தந்தி’ ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வெளியாகிறது.

‘தினத்தந்தி’யின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தொடங்கப்பட்டது. அங்குள்ள தமிழர்களின் பேராதரவை பெற்ற ‘தினத்தந்தி’, தனது 2-வது சர்வதேச பதிப்பை இலங்கையில் வெளியிடுகிறது.



இது ‘தினத்தந்தி’யின் 18-வது பதிப்பு ஆகும்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இலங்கை அரசிலும் தமிழர்கள் இடம் பெற்று உள்ளனர். அங்கு தொழில், வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நெருக்கமான உறவு நிலவுகிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் நீண்ட கால கனவை பூர்த்தி செய்யும் வகையில் ‘தினத்தந்தி’ தனது புதிய பதிப்பை இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வெளியிடுகிறது.

இலங்கையில் அதிசிறந்த ஊடக சேவையாற்றி வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான ‘வீரகேசரி’ தமிழ் நாளிதழுடன் இணைந்து ‘தினத்தந்தி’ வெளியாகிறது.

பாரம்பரியம் மிக்க ‘வீர கேசரி’ 1930-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த சுப்பிர மணியம் செட்டியாரால் தொடங்கப்பட்டு, கடந்த 89 ஆண்டுகளாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு நாள்தோறும் செய்திகளை வழங்கி வருகிறது. ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரால் 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’, தனது பவள விழாவை சிறப்பாக கொண்டாடி, 77 ஆண்டுகளாக தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கி வருகிறது. எல்லைகளை தாண்டி ‘தினத்தந்தி’ தனது இலங்கை பதிப்பை ‘வீரகேசரி’யுடன் இணைந்து வெளியிடுகிறது.

‘தினத்தந்தி’ இலங்கை பதிப்பின் இதழ் இன்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகிறது.

‘தினத்தந்தி’ இலங்கை பதிப்பின் மூலம் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள செய்திகள் இலங்கை மக்களுக்கு தாமதம் இன்றி உடனுக்குடன் கிடைக்கும். #DailyThanthi #NewsPaper #SriLanka
Tags:    

Similar News