செய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல்

Published On 2019-01-22 16:23 GMT   |   Update On 2019-01-22 16:23 GMT
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. #TiruvarurBypoll #HighCourt
மதுரை:

திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணனும், அ.ம.மு.க. சார்பில் எஸ்.காமராஜும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதைத்தொடர்ந்து, திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதற்கான ஒப்புதல் பெறவேண்டும்.  இதனால் இடைத்தேர்தலை ரத்து செய்த விதம் சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.  #TiruvarurBypoll #HighCourt
Tags:    

Similar News