செய்திகள்

செம்பனார்கோவிலில் விபத்து: வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

Published On 2019-01-21 15:18 GMT   |   Update On 2019-01-21 15:18 GMT
செம்பனார்கோவிலில் வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் திருக்கடையூர் கோவிலில் நேற்று திருச்சியை சேர்ந்த மதிவாணன்-ரஞ்சனி ஆகியோரின் 60-ம் கல்யாணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர்கள் 19 பேர் ஒரு வேனில் வந்தனர். வேனை திருச்சியை சேர்ந்த டிரைவர் செபஸ்டின்ராஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

பின்னர் திருமணம் முடிந்து அனைவரும் திருச்சிக்கு வேனில் திரும்பினர். அப்போது செம்பனார் கோவில் பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த கரூரை சேர்ந்த கதிர்வேல், இவரது மனைவி கோமதி, திருச்சி காட்டூரை சேர்ந்த பழனிசாமி, இவரது மனைவி சரோஜா, அதே ஊரை சேர்ந்த பழனிவேல், இவரது மனைவி நாகேஸ்வரி, திண்டுக்கல்லை சேர்ந்த உமாதேவி(60), இவரது கணவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு சுரேஷ், டிரைவர் செபஸ்டின்ராஜி உள்பட 20 பேரும் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த பொறையார் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உமாதேவியை(60) திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News