செய்திகள்

அரசு பொருட்காட்சியை 1¼ லட்சம் பேர் கண்டுகளித்தனர் - காணும் பொங்கலில் கூட்டம் நிரம்பியது

Published On 2019-01-17 08:52 GMT   |   Update On 2019-01-17 08:52 GMT
சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சிக்கு இதுவரையில் 1 ¼ லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இன்று காணும் பொங்கலையொட்டி கூட்டம் நிரம்பி வழிகிறது. #KaanumPongal
சென்னை:

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந் தேதி தொடங்கிய பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் விளையாட்டு சாதனங்கள், மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் இடம் பெற்று உள்ளன.

தாமதமாக தொடங்கப்பட்ட பொருட்காட்சி பொங்கல் விடுமுறையை யொட்டி களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக கூட்டமின்றி காணப்பட்ட பொருட்காட்சியில் பொங்கல் முதல் கூட்டம் கூடியது.

நேற்று மாட்டு பொங்கல் ஒரே நாளில் மட்டும் 60 ஆயிரம் பேர் பொருட்காட்சியை கண்டுகளித்தனர். இதுவரையில் 1 ¼ லட்சம் பேர் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.

இன்று காணும் பொங்கலையொட்டி கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பம், குடும்பமாக பொருட்காட்சிக்கு படையெடுக்க தொடங்கினர். புதுமண தம்பதிகள், காதல் ஜோடிகள் என பிற்பகல் முதல் கூட்டம் கூட தொடங்கியது. இன்று சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் ராட்டினங்கள், விளையாட்டு சாதனங்கள் அதிகம் உள்ளதால் அதில் சிறுவர்களை அமர்த்தி பெற்றோர்கள் மகிழ்வித்தனர். எப்போதும் போல சோலா பூரி, பஜ்ஜி, அப்பளம் போன்ற உணவு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொருட்காட்சி இன்னும் 2 மாதம் வரை நடைபெறுகிறது. #KaanumPongal
Tags:    

Similar News