செய்திகள்

குடிபோதையில் தகராறு- தம்பியை குழவி கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளி

Published On 2019-01-16 16:54 GMT   |   Update On 2019-01-16 16:54 GMT
கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த தம்பியை குழவி கல்லால் தாக்கி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை:

கோவை தெலுங்குபாளையம் அருகே உள்ள பாரதி வீதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் சவுந்தர்ராஜன் (30). வேலைக்கு செல்லும் இவர் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். பலமுறை குடிபழக்கத்தை கைவிடுமாறு சுந்தர்ராஜன் கூறியும் சவுந்தர்ராஜன் கேட்கவில்லை.

சம்பவத்தன்றும் சவுதர் ராஜன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது அண்ணனிடம் தகராறு செய்தார். இதனை அண்ணனின் மனைவி தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சவுந்தர்ராஜன் அவரை தரக்குறைவாக பேசினார். தனது மனைவியை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜன் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து சவுந்தர் ராஜனின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் சுந்தர்ராஜன் செல்வபுரம் போலீசில் சரணடைந்தார்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சவுந்தர்ராஜனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கொன்ற சுந்தர்ராஜனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News