செய்திகள்

ஊட்டியில் 100 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்து- கணவன்-மனைவி படுகாயத்துடன் மீட்பு

Published On 2019-01-07 10:32 GMT   |   Update On 2019-01-07 10:32 GMT
ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது 100 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்த விபத்தில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கோவை:

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 48). இவரது மனைவி ஹேமா(42). நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே சென்று கொண்டு இருந்தபோது வெங்கடேஷ் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து 100 அடி பள்ளத்துக்குள் பாய்ந்தது. விபத்தில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வெலிங்டன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த கணவன்-மனைவி இருவரையும் கயிறு கட்டி மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கணவன்-மனைவி இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மீட்பு பணி காரணமாக குன்னூர்-மேட்டுப்பாயம் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News