செய்திகள்

தஞ்சையில் சுற்றுலா பஸ் மோதி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பலி

Published On 2019-01-05 11:39 GMT   |   Update On 2019-01-05 11:39 GMT
தஞ்சையில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கர்நாடகா பஸ் மோதி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பலியானார்.
தஞ்சாவூர்:

தஞ்சை-நாகை சாலை, பீட்டர் ஞானப்பிரகாசம் நகரில் வசித்து வந்தவர் ராமன் (வயது 66). இவர் இந்தியன் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் செந்தில்குமார். திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று, ராமன் தன்னுடைய சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் சென்றிருந்தார்.

நேற்று இரவு அவர் ஒரத்தநாட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். தஞ்சை- மன்னார்குடி சாலையில் சடையார்கோவில் அருகே வந்தபோது, அந்தவழியாக வேளாங்கண்ணியில் இருந்து வந்த கர்நாடகா சுற்றுலா பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ராமனின் தலையில் பஸ்சின் முன்சக்கரம் ஏறிஇறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ராமன் உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News