செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2019-01-04 15:01 GMT   |   Update On 2019-01-04 15:01 GMT
ஜெயங்கொண்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகன ஓட்டிகள் தாராளமாக சென்று வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு 4 ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு கடைக்காரர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தினார். 

இந்நிலையில் ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து நேற்று முன்தினமே ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் சிலர் நேற்று காலை அகற்றினர். பெரும்பாலான கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர். இந்நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில், நேற்று காலை 11 மணியளவில் ஜெயங்கொண்டம் கடைவீதி மற்றும் சாலையோர பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி ஊழியர்கள், போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகன ஓட்டிகள் தாராளமாக சென்று வருகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

மேலும் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையேல் மீண்டும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் தொடரும். எனவே தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருக்க தனிப்படை அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிவராஜ், சண்முகசுந்தரம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மின்சார வாரிய அதிகாரி சிலம்பரசன், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News