செய்திகள்

ஆலங்குடியில் மல்லிகை பூக்கள் விலை உயர்வு- பொதுமக்கள் அவதி

Published On 2019-01-04 14:27 GMT   |   Update On 2019-01-04 14:27 GMT
ஆலங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை பூக்கள் விலை உயர்ந்ததால் பெண்கள் அவதி அடைந்தனர்.
ஆலங்குடி:

கஜா புயலின் கோரதாண்டவத்தால் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கரும்பு, சோளம், கடலை, தென்னை, மா, பலா, வேம்பு, தேக்கு, பூக்கள், பயிர் செடி, கொடிகள் என அனைத்தும் கடும் சேதம் அடைந்தது. இதனால் இப்பகுதி முழுவதும் சாகுபடி செய்த பூக்கள் முற்றிலும் அழிந்து விட்டது. இதனால் ஆலங்குடி பகுதியில் மல்லிகை பூக்கள் கிடைக்காமல் பெண்கள் அவதி அடைந்தனர். 

இந்நிலையில் கிறிஸ்மஸ், ஆங்கில புத்தாண்டு தொடர்ந்து வந்ததால் பூக்கள் விலை அதிகமாக ஏறுமுகமாக உள்ளது. பனி காலத்தில் மல்லிகை பூக்களின் உற்பத்தி குறைந்தாலும் வெளி மாவட்டங்களிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்டதாலும், அவற்றின் விலை வழக்கத்தை விட இரு மடங்கானது. சாதாரண நாட்களில் முழம் 20, ரூ30க்கு விற்க்கபடும். ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஒரு வார காலமாக மல்லிகை பூ முழம் ரூபாய் 200 ஐ தாண்டியது. சில கடைகளில் மல்லிகை பூ இல்லை.
இருந்த போதிலும் மல்லிகைக்கு தனி மவுசு இருப்பதால் ரூ.200 ஐ கொடுத்தும் மல்லிகை பூவை பலரும் வாங்கிச் சென்றதால் விற்று தீர்ந்தன.

மேலும் மல்லிகைக்கு மாற்றாக பெண்கள் விரும்பக்கூடிய நந்தியா வட்டை, காக்கட்டாம் பூ, ஜாதி மல்லி, முல்லைப் பூ, சென்டிப் பூ, இருவாச்சி பூக்கள் ரூ 50, கதம்ப பூக்கள் ரூ. 30 க்கும் இவைகளும் விற்க்கபட்டன. பூக்களின் விலை உயர்வால் பெண்களும், பொதுமக்களும் அவதி அடைந்தனர். 
Tags:    

Similar News